பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது
குன்னூர் அருகே வீட்டில் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
குன்னூர்,
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் லோரா என்பவர், குன்னூர் அருகே ட்ரூக் எஸ்டேட் பகுதியில் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா குமாரி (வயது 22). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ரேகா குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவசர சேவைக்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது ரேகா குமாரிக்கு பிரசவ வலி அதிகமாக இருந்ததால், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் பிரசவம் பார்த்ததில், ரேகா குமாரிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. தொடர்ந்து தாய், 2 குழந்தைகள் பத்திரமாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக உள்ளனர். கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் மற்றும் டிரைவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.