சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பெண்
சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சத்தை போலீஸ் நிலையத்தில் பெண் ஒப்படைத்தார்.
திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் அதே பகுதியில் காலை நேர டிபன் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் தினமும் ரூ.100 சம்பளத்தில் வேலை பார்த்து வருபவர் ராஜேஸ்வரி (வயது 53). இவரது கணவரும், குழந்தையும் இறந்துவிட்டனர். இந்தநிலையில் நேற்று காலை அவர் வழக்கம்போல் வேலைக்கு வந்தபோது, கடை அருகே சாலையில் பச்சைநிற காகித பை ஒன்று கிடந்தது. ராஜேஸ்வரி அந்த பையை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் கட்டு, கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது.
இதை கண்ட ராஜேஸ்வரி சிறிதும் தாமதிக்காமல் கடை உரிமையாளர் பிரபாகரிடம் இது குறித்து கூறி, பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். உடனே இருவரும் பணத்துடன் அங்கிருந்து காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு போலீசாரிடம், சாலையில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை கொடுத்து, அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு அங்கு வந்து பணத்தை ஒப்படைத்த ராஜேஸ்வரியின் நேர்மையை பாராட்டினார். மேலும் பணம் கிடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.