தற்கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்ட பெண்


தற்கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்ட பெண்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

"கலெக்டர் அலுவலகத்தில் என் உயிர் பிரியும்" என தற்கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்ட பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

"கலெக்டர் அலுவலகத்தில் என் உயிர் பிரியும்" என தற்கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்ட பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை மிரட்டல் வீடியோ

குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மனைவி ஆஷா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இவர் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், "குளச்சல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவர் என்னிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்து எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போலீசார் விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை. கலெக்டர் அலுவலகத்தில் என் உயிர் பிரியும்" என்று கூறியிருந்தார். வீடியோவில் மண்எண்ணெய் கேனையும் தூக்கி காட்டினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு மற்றும் பின்புற நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

பெண்ணை பிடித்து விசாரணை

இந்தநிலையில் ஆஷா கலெக்டர் அலுவலகம் வந்தார். அவரை பார்த்ததும் உடனடியாக உஷாரான மகளிர் போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரது பேக்கை வாங்கி சோதனை செய்ததில் மண்எண்ணெய் கேன் இல்லை. மாறாக தனது கோரிக்கைகள் எழுதிய மனு வைத்திருந்தார். அந்த மனுவை கலெக்டரிடம் கொடுக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

எனினும் அவர் தற்கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்டு இருந்ததால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, "என்னை பற்றி பெண் போலீஸ் அவதூறு பரப்புகிறார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கேட்டு தான் போலீசில் புகார் மனு அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். தற்போது வழக்கை வாபஸ் பெறக்கோரி மிரட்டுகிறார்கள். எனவே கலெக்டரிடம் மனு அளிக்க வந்தேன்" என்றார்.

பரபரப்பு

இதனையடுத்து ஆஷாவை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் அவரும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story