கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்


கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்
x

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

மண்எண்ணெய்யை ஊற்றி...

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலகம் முன் உள்ள பயணிகள் நிழற்குடை அருகே பெண் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைக்கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்து, தீக்குளிக்க முயன்றதை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்

விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சிறுகுடல், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி மாரியாயி(வயது 53) என்பது தெரியவந்தது.

கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அவரும், அதே பகுதியை சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த நிலத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டா பெற்று, பத்திரம் வாங்கியதாக தெரிகிறது. அந்த பகுதியில் அவர்கள் மாட்டு கொட்டகை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு குழி தோண்டியுள்ளனர். இந்நிலையில், அந்த பகுதி தனக்கான இடம் என்றும், அதனை அந்த குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குன்னம் தாலுகா அலுவலகம் மற்றும் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாரியாயி தீக்குளிக்க முயன்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு

இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கொடுப்பதற்கு மனு எதுவும் மாரியாயி எடுத்து வரவில்லை. இதனால் மாரியாயியை போலீசார் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், அலுவலர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாரியாயி மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story