கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஒரத்தநாட்டை அடுத்த ஆத்தங்கரைபட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி லதா(வயது 38) என்பவர் கையில் பையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென பையில் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயன்றார். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிவந்து, லதாவிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். பின்னர் லதாவை விசாரணைக்காக போலீஸ் ஜீப்பில் ஏற்றி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து லதா கூறுகையில், "எனது கணவர் இறந்து விட்டார். 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். என் கணவரின் உறவினர்கள் சிலருக்கும், எனக்கும் இடையே சொத்துப்பிரச்சினை நிலவி வருகிறது. இதுகுறித்து அவர்களிடம் முறையிட்டபோது என்னை மிரட்டுகின்றனர். போலீசில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தற்கொலை செய்ய முடிவு செய்து மண்எண்ணெய் கேனுடன் வந்தேன். எனக்கு சொந்தமான சொத்தை மீட்டுத்தர வேண்டும்" என்றார்.