பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஊட்டியில் நடைபாதை கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டியில் நடைபாதை கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடைபாதை கடைகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இங்கு வியாபாரிகள் கடந்த சில ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வந்தனர். ஊட்டி நகராட்சி சார்பில், ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு பதிலாக நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக கடைகள் கட்டி வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கடைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை மற்றும் டெபாசிட் தொகை அதிகமாக இருப்பதால், சில வியாபாரிகள் கடையை வாடகைக்கு எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் அவர்கள் நடைபாதையில் கடைகள் வைத்து நடத்தி வந்தனர்.
தீக்குளிக்க முயற்சி
இந்தநிலையில் நேற்று நகராட்சி சார்பில், போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரி செல்வி, கேனில் ஏற்கனவே டீசலுடன் கலந்து வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி கேனை பிடுங்கினர். மேலும் பெண் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறுகையில், நகராட்சி சார்பில் அனைத்து வியாபாரிகளுக்கும் மாற்று ஏற்பாடாக கடைகள் கட்டப்பட்டு இருமுறை டெண்டர் விடப்பட்டது. அதில் சில வியாபாரிகள் கலந்துகொள்ளவில்லை. அங்கு தனிப்பட்ட முறையில் யாருக்கும் வாடகை நிர்ணயம் செய்யவில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியாக வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி ரூ.2 லட்சம் டெபாசிட் தொகை மற்றும் ரூ.7,500 கடை வாடகை செலுத்தி ஏலத்தில் கலந்துகொண்டு வியாபாரிகள் கடையை எடுத்துக்கொள்ளலாம் என்றார்.