நகையை பறித்த கொள்ளையனின் கைவிரல்களை கடித்து துணிச்சலுடன் போராடிய பெண் அஞ்சுகிராமம் அருகே பரபரப்பு
அஞ்சுகிராமம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபரின் விரல்களை பெண் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபரின் விரல்களை பெண் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடு புகுந்த மர்ம நபர்
மருங்கூர் அருகே உள்ள அழகனாபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி வளர்மதி (56). பாஸ்கரன் நேற்று காலை 6 மணியளவில் விவசாய வேலைக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். மனைவி வளர்மதி சமையல் அறையில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.
இதை நோட்டமிட்ட இரண்டு மர்ம நபர்கள் மிளகாய் பொடி, துணியுடன் பாஸ்கரன் வீட்டு வந்தனர். அவர்களில் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். தனது கணவர் தான் வீட்டிற்குள் வருகிறார் என்று நினைத்த வளர்மதி சமையலறையில் இருந்து வீட்டின் முன்பக்கம் வந்தார்.
நகை பறிப்பு
அப்போது மர்ம நபர் திடீரென பாய்ந்து வளர்மதியின் முகத்தை துணியால் மூடி கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை இழுத்து பறித்தார். உடனே வளர்மதி நகையை காப்பாற்ற கொள்ளையனுடன் போராடினார். அந்த போராட்டத்தில் கொள்ளையனின் கை விரல்களை கடித்து குதறினார்.
ஆனால் அந்த நபர் வளர்மதியை கீழே தள்ளி விட்டு கையில் ரத்தம் சொட்ட சொட்ட 10 பவுன் நகையுடன் வெளியே தப்பி வந்தார். தொடர்ந்து அங்கு மறைந்திருந்த இன்னொரு நபருடன் சேர்ந்து இருவரும் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அஞ்சுகிராமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.