மேல்முறையீடு செய்ய வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் மேல்முறையீடு செய்ய வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கல்:
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை கடந்த 15-ந்தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து குடும்ப தலைவிகள் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தகுதி இருந்து நிராகரிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மேல்முறையீட்டினை அருகில் உள்ள உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று காலை கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்ய 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதற்கிடையே இ-சேவை மையத்தில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் தாசில்தார் அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த பெண்களிடம் விவரங்களை பதிவு செய்து கொண்டு அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கினர். அப்போது இ-சேவை மையத்திற்கு வந்திருந்த அகரகடம்பனூர் ஊராட்சி புத்தர்மங்கலம் மட்ட குளம் பகுதியை சேர்ந்த கோகிலா என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தாசில்தார் அலுவலக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ரமேஷ் அங்கு வந்து உரிமை தொகை பெற முடியாத பெண்களிடம் அனைத்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு, சர்வர் பிரச்சினை சரியானவுடன் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.