குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு
ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் மனுக்களை வாங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியை சேர்ந்த கோட்டைச்சாமி என்பவரின் மனைவி சாந்தி(65) என்பவர் நிலப்பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தார்.
சாமி ஆடிய பெண்
முதல்வரிசையில் அமர்ந்திருந்த அவர் திடீரென்று எழுந்து, போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சாமி ஆடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை ஆசுவாசப்படுத்தி, முகத்தில் தண்ணீர் தெளித்தனர். இதனை கண்ட அவரின் மகன் ரமேஷ், வேப்பிலையை கையில் கொடுத்தார். பின்னர் சாந்தியை அழைத்து போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை விசாரித்தார்.
அப்போது சாந்தி, பெருநாழியில் தனக்கு சொந்தமான நிலத்தினை, அண்ணன் குருசாமி கோவில் கட்ட தருமாறு கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார். நிலத்தை தர முடியாது என்று மறுத்ததால் தன்னை தாக்கியதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக்கூறினார். இதனை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெண் ஒருவர் சாமி ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது.