போலீஸ் நிலையத்திற்கு தர்ணாவில் ஈடுபட வந்த பெண்ணால் பரபரப்பு


போலீஸ் நிலையத்திற்கு தர்ணாவில் ஈடுபட வந்த பெண்ணால் பரபரப்பு
x

போலீஸ் நிலையத்திற்கு தர்ணாவில் ஈடுபட வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பலாத்காரம்

பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று மதியம் ஒரு பெண் வந்தார். அங்கு அவர் தர்ணாவில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். மேலும் அந்த பெண் கூறுகையில், எனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தபோது, எனக்கு லாரி டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்தார். மேலும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றால், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி நானும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். ஆனால், என்னை அந்த லாரி டிரைவர் திருமணம் செய்து கொள்ளாமல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். அதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல்

இது பற்றி அந்த லாரி டிரைவரிடம் கேட்டபோது அவரும், அவரது குடும்பத்தினரும் என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அப்போது அவரிடம், ஏற்கனவே இது தொடர்பாக அந்த பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story