விஷ பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு விஷ பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு விஷ பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
விஷ பாட்டிலுடன் வந்த பெண்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள திரளான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
2 சிறுவர்களுடன் பெண் ஒருவரும் மனு கொடுப்பதற்காக வந்து இருந்தார். அவர் பூச்சி மருந்து பாட்டிலுடன்(விஷம்) கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு நின்று கொண்டிருந்தார்.
போலீசார் பிடுங்கினர்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த பெண்ணிடம் இருந்து விஷ பாட்டிலை பிடுங்கினர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெயர் வாலாம்பாள் என்றும், தன்னுடன் வந்த சிறுவர்கள் தனது மகன்கள் என்றும் வேதாரண்யம் ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி என்றும் அவர் கூறினார். தனது மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்காக வந்து இருந்ததாக அவர் தெரிவித்தார்.
மின்சார வசதி இல்லை
போலீசாரிடம் வாலாம்பாள் கூறியதாவது:-
நான் ஆதனூர் 8-வது வார்டில் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது வீட்டில் மின் இணைப்பு வழங்கக்கோரி மின்வாரியத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மனு கொடுத்தேன். 3 ஆண்டுகளாகியும் எனது குடிசை வீட்டுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் எனது மகன்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனது பரிதாப நிலையை மாவட்ட நிர்வாகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விஷ பாட்டிலுடன் தற்கொலை செய்து கொள்வதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன் என்றார்.
பரபரப்பு
இதையடுத்து அந்த பெண்ணை சமாதானம் செய்த போலீசார் அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். தொடர்ந்து கோரிக்கை மனுவை வாலாம்பாள் கலெக்டரிடம் கொடுத்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர் தனது மகன்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்வதற்காக பெண் விஷ பாட்டிலுடன் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.