காதல் திருமணம் செய்த பெண் திடீர் சாவு
விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் திடீரென இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் கே.கே.சாலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் சத்யா என்கிற சத்யாதமிழ் (வயது 21). இவர் வளவனூர் அருகே நரையூரை சேர்ந்த அஜித் (30) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு சத்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சத்யாவும், அஜித்தும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு அஜித்துடன் அவரது வீட்டில் சத்யா வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
பெண் மர்ம சாவு
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சத்யாவிடம் ரூ.50 ஆயிரம் பணம் தரும்படி கேட்டு அவரை அஜித் அடித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று காலை சத்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரை புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் இதுபற்றி அஜித், தனது மாமனார் கலியமூர்த்தியை தொடர்புகொண்டு கூறியுள்ளார். இந்த சூழலில் மருத்துவமனையில் சத்யா உயிரிழந்துள்ளார்.
இதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்த கலியமூர்த்தி, இதுகுறித்து வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகள் சத்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யா உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.