மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ள மறுத்த பெண் வெட்டிக் கொலைகணவர் கைது
மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் சகோதரியின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள முயன்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கணவரை போலீசார் கைது செய்தனர்.
தண்டராம்பட்டு,
மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் சகோதரியின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள முயன்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கணவரை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த புதூர் செக்கடி ஊராட்சி ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 47). விவசாயி. இவரது மனைவி ராணி (43). இவர்களுக்கு ராஜபாண்டி (24), சிவா (22) என்று 2 மகன்களும் பரணி (20) என்ற மகளும் உள்ளனர்.
ராணி வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து சம்பாதித்து வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு பழனியின் தாயார் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் இறுதி சடங்கிற்காக ராணி ஊருக்கு வந்தார் பின்பு வேலைக்கு செல்லாமல் ஊரிலேயே இருந்து விட்டார்.
இதனிடையே புதூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை மகள் பரணி காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபரை பரணி நேற்று முன்தினம் தந்தை பழனி மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் அதே ஊரில் காதல் திருமணம் செய்து கொண்டார்.
மனைவி வெட்டிக்கொலை
இந்த திருமணம் தாயார் ராணிக்கு பிடிக்காததால் அவர் அதில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து விட்டார். ஆனால் தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் உள்ள ராணியின் அக்கா வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து தர்மபுரிக்கு செல்வதற்காக ராணி தயாராகிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த பழனி, ஆத்திரமடைந்து மகள் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் சகோதரி வீட்டு திருமணத்திற்கு மட்டும் செல்கிறாயே என கேட்டு கண்டித்துள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பழனி வீட்டிலிருந்த கத்தியால் ராணியின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் மனைவி ராணி ரத்த வெள்ளத்தில் விழுந்து அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
கணவர் கைது
அப்போது வெளியே சென்று இருந்த ராணியின் மகன் சிவா வீட்டுக்கு வந்தபோது ரத்த வெள்ளத்தில் தாயார் ராணி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தானிப்பாடி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக திருவண்ணாமலை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து பக்கத்து கிராமத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கி இருந்த ராணியின் கணவர் பழனியை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் திருமணத்தில் கலந்து கொள்ளாததால் மனைவியை அவரது கணவரே வெட்டி கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.