புல் அறுக்கச் சென்ற பெண்ணை கொன்று நகை கொள்ளை
தேனி அருகே புல் அறுக்கச் சென்ற பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
புல் அறுக்கச் சென்ற பெண்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வாசுகி அம்மையார் தெருவை சேர்ந்தவர் பெருமாள். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (வயது 45). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து புல் அறுத்து விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் புல் அறுப்பதற்காக செல்வி, பெண்கள் சிலருடன் சென்றார். ஆனால் இரவு வரை செல்வி வீடு திரும்பவில்லை.
இதனால் அவருடைய கணவர் பெருமாள் மற்றும் குடும்பத்தினர் செல்வியை தேடினர். புல் அறுக்கச் சென்றதாக கூறப்பட்ட இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
படுகொலை
இந்நிலையில் தேனி அருகே வடபுதுப்பட்டியில் அழகர்கோவில் செல்லும் சாலையில், கோம்பைக் கரடு பகுதியில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் செல்வி பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருமாள் தனது உறவினர்களுடன் அங்கு சென்றார். அல்லிநகரம் போலீசாரும் தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது செல்வி பின்தலையில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்து இருந்த மஞ்சள் தாலிக்கயிறு அதே இடத்தில் அறுந்து கிடந்தது. அதில் கோர்க்கப்பட்டு இருந்த தங்க குழாய்கள், தாலி மற்றும் காதில் அணிந்து இருந்த 2 கிராம் தங்கத்தோடு என சுமார் 1 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. இதனால் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த நபர், நகைகளை கொள்ளையடித்துச் சென்று இருக்கலாம் என்று தெரியவந்தது.
போலீஸ் சூப்பிரண்டு
பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் வந்து பார்வையிட்டார்.
அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது.ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தொழிலாளி கைது
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் செய்தார்.
அதில், தனது மனைவியுடன் அடிக்கடி வேலைக்கு சென்ற சருத்துப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி இருளப்பன் (62) மீது சந்தேகப்படுவதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருளப்பனை தேடினர்.
அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருப்பதை அறிந்த தனிப்படையினர் அங்கு சென்றனர். அவரை பிடித்து விசாரணை செய்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவரை தேனிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது அவர் அளித்த பரபரப்பு வாக்கு மூலத்தில், 'எனக்கும் செல்விக்கும் இடையே பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று செல்விக்கு உதவியாக நானும் புல் அறுத்துக் கொடுத்தேன். அப்போது அவரை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்தேன். அவரும் சம்மதித்தார். வாழைத்தோப்புக்கு அழைத்துச் சென்ற போது மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரத்தில் அங்கே கிடந்த கட்டையை எடுத்து தாக்கினேன். அதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருடைய நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டேன். இந் நிலையில் போலீசார் பிடித்து விட்டனர்' என்று அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
கொலையாளியை துரிதமாக கைது செய்த தனிப்படை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஏட்டுகள் கணேசன், விஜய், செல்வம் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.