சேர்ந்து வாழ்ந்ததாக திருநங்கை பரபரப்பு புகார்: பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியதால் வாலிபர் தற்கொலை
சேர்ந்து வாழ்ந்ததாக திருநங்கை புகார் கூறியதை தொடர்ந்து பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இதனால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி:
எலக்ட்ரீசியன்
சங்ககிரி அருகே ஐவேலி கிராமம் மாவெளிபாளையம் குட்டகாடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் (வயது 25), எலக்ட்ரீசியன். இவருக்கும், ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பேசி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற 25-ந் தேதி திருமணம் நடைபெறஇருந்தது.
இதற்கிடையே சங்ககிரி பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவர், விக்னேசுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், அந்த புகைப்படத்தை விக்னேசுக்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணம் நின்றது
மேலும், நான் விக்னேசை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று திருநங்கை, அந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
உடனே பெண் வீட்டார், விக்னேஷ் பெற்றோரை சந்தித்து, திருநங்கையுடன் சேர்ந்து வாழ்ந்தவருக்கு எங்களது மகளை திருமணம் செய்து தர முடியாது என்று கூறி திருமணத்தை நிறுத்தியதாக தெரிகிறது. திருமணம் நின்றதால் விக்னேஷ் குடும்பத்தினர் வேதனை அடைந்தனர்.
தற்கொலை
மேலும் அந்த திருநங்கை, விக்னேஷ் வீட்டுக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் எனக்கு பணம் தர வேண்டும் என்று கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த விக்னேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருநங்கையின் புகாரால் திருமணம் நின்றதுடன் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்ககிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.