மனு அளிக்க வந்த பெண்களால் பரபரப்பு
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 6 பெண்களை போலீசார் தடுத்தபோது தங்கள் குழந்தைகளின் கழுத்தை நெரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 6 பெண்களை போலீசார் தடுத்தபோது தங்கள் குழந்தைகளின் கழுத்தை நெரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுப்பாதை
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி வாடிவாசல் தெருவை சேர்ந்தவர் மீனா (வயது 40). இவரது வீட்டுக்கு பாதை இல்லாத நிலையில் அரசு நிலத்திற்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதை ரத்து செய்ய கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.
பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தனது மனுவை திருப்பித் தருமாறு நேற்று 5 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அனுமதி மறுப்பு
கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்களும், மனு கொடுக்க வந்த பொதுமக்களும் அலுவலகத்திற்கு செல்ல இயலாத நிலையில் மீனா உள்பட 6 பெண்களும் தரையில் அமர்ந்தனர்.
இதற்கிடையே போலீசார் அவர்களை அழைத்துச் செல்ல முயன்றபோது திடீரென தாங்கள் அழைத்து வந்த குழந்தைகளின் கழுத்தை நெரித்து அனைவரின் கவனத்தை ஈர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் பெண் போலீசாரை அவதூறாக பேசியதைத்தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பிரமிளா, சத்யா, ஈஸ்வரி ஆகிய 3 பெண் போலீசாருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
6 பேர் கைது
இதுதொடர்பாக கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் மீனா, கற்பகம் (67), விஜயலட்சுமி (45), சாரதா (42), சூரிய தேவி(31), சரஸ்வதி (33) ஆகிய 6 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.