பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அரணாக மகளிர் ஆணையம் இருக்கும் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி உறுதி


பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அரணாக மகளிர் ஆணையம் இருக்கும்  மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி உறுதி
x

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அரணாக மகளிர் ஆணையம் இருக்கும் என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மகளிர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அவர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மகளிர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மகளிர் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களை காப்பதற்கும், பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கும், குழந்தை திருமண தடுப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு போன்றவற்றை முற்றிலும் தடுப்பதற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அரணாக மகளிர் ஆணையம் இருக்கும்.

எதிர்வரும் காலங்களிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எங்கும் எவ்விதத்திலும் தீங்கு ஏற்படவில்லை என்ற நிலையயை உருவாக்கிட வேண்டும். அதற்காக அனைத்துத்துறை அலுவலர்களும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மகளிர் ஆணைய உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பேட்டி

கூட்டம் முடிந்த பிறகு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய அளவில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது. ஒடிசா போன்ற வடமாநிலங்களை விட இங்கு குற்றங்கள் குறைந்துள்ளது. ஹெல்ப்லைன் மூலம் தொடர்பு கொள்ளும் பெண்களுக்கு உரிய மருத்துவ உதவி, கவுன்சிலிங் அளிக்கப்பட்டு, தங்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை. தமிழகத்தில் குடும்ப வன்முறை குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story