மரக்கடை உரிமையாளர் பலி
கார் மோதி மரக்கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்
எட்டயபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் சடையன்வலசு பகுதியைச் சேர்ந்த கார்மேகம் மகன் துரைப்பாண்டி. மஸ்கட்டில் இருந்து வந்த தனது நண்பர் குருசெல்வம் என்பவரை திருவனந்தபுரத்திலிருந்து அழைத்துக் கொண்டு ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுப்பிரமணியபுரத்தில் நேற்று முன்தினம் மாலை காரை துரைப்பாண்டி ஓட்டி வந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் சாலையை கடந்தபோது அவர் மீது மோதியதோடு வலது புறத்தில் உள்ள மரக்கடையில் இருந்த சுப்பையா என்பவரின் மகன் ராஜ்குமார் மீதும் மோதியது.
இதில் மாணவி், மரக்கடை உரிமையாளர் ராஜ்குமார் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மரக்கடை உரிமையாளர் ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளி மாணவி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த துரைப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.