மொட்டை அடிக்க தற்காலிக கூடாரம் அமைக்கும் பணி தீவிரம்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் மொட்டை அடிக்க தற்காலிக கூடாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லிக்குப்பம்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு நேரில் வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து செல்வார்கள்.
அந்த வகையில் இந்தாண்டு தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கோவில் பின்புறம் உள்ள மொட்டை அடிக்கும் கட்டிடத்தில் ஏராளமான மக்கள் திரண்டு வந்து மொட்டை அடித்து செல்கின்றனர். இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். அதனால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மெயின்ரோட்டில் சாலக்கரை இலுப்பை தோப்பில் தற்காலிகமாக மொட்டை அடிப்பதற்கு கூடாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக குளிப்பதற்கு வசதியாக தற்காலிக கட்டிடமும் கட்டப்படுகிறது. மேலும் திருவந்திபுரம் கோவிலை சுற்றிலும் மரக்கட்டைகளால் தடுப்புக்கட்டை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி கும்பிடுவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.