சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தீவிரம்


சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கோத்தகிரியில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கோத்தகிரியில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் அதிகரிக்க தமிழக அரசு பசுமை தமிழகம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து, மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 31 ஆயிரத்து 194 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு (23.98 சதவீதம்) மட்டுமே காடுகள் உள்ளன. கடந்த 1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய வனக்கொள்கையின்படி, மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பரப்பு இருக்க வேண்டும்.

இந்த இலக்கை எட்டவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பசுமை போர்வையை உருவாக்க வேண்டி உள்ளது. இந்த இலக்கை அடுத்த 10 ஆண்டுகளில் எட்டுவதற்காக தமிழக அரசு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சும் அந்நிய நாட்டு மரங்கள் மற்றும் தாவர வகைகளை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ேசாலை மரக்கன்றுகள்

பொது இடங்கள், சாலையோரங்கள், பள்ளி, கோவில் வளாகம், வருவாய்த்துறைக்கு சொந்தமான காலி இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்நாட்டு சோலை மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இங்கிலாந்து அரசின் கீழ் உள்ள காமன்வெல்த் அமைப்பின் பசுமை நிழற்குடை விருது பெற்ற கோத்தகிரி வனத்துறைக்கு சொந்தமான லாங்வுட் சோலை வனப்பகுதியில் உள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்றி சோலை மரக்கன்றுகள் நடவு செய்யபட்டு வருகிறது.

மேலும் உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பினர் மரக்கன்றுகள் நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி ஈளாடா அருகே கதவுத்தொரை கிராம பகுதியில் காலியாக இருந்த மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு இல்லாமல் மரக்கன்றுகள் வளரவும், சேதமடையாமல் இருக்கவும் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.


Next Story