ராஜகோபுர கலசங்களுக்கு தங்க 'ரேக்' ஒட்டும் பணி


ராஜகோபுர கலசங்களுக்கு தங்க ரேக் ஒட்டும் பணி
x
தினத்தந்தி 6 Jan 2023 12:45 AM IST (Updated: 6 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ராஜகோபுர கலசங்கள் தங்க 'ரேக்' ஒட்டப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்

தங்க ரேக்


பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடப்பதால் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 25-ந்தேதி பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. வருகிற 18-ந்தேதி கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 23-ந்தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ராஜகோபுர கலசங்களுக்கு தங்க 'ரேக்' ஒட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.


தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றதால் தங்க 'ரேக்' ஒட்டப்பட்ட 5 கலசங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வருகிற 18-ந்தேதி பூர்வாங்க பூஜை நடைபெறும் போது கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.


18 இடங்களில் எல்.இ.டி. திரை


இந்நிலையில் கும்பாபிஷேக பணிகள் குறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, கும்பாபிஷேகம் நடைபெறும்போது குறிப்பிட்ட அளவில் மட்டுமே பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர். அதேவேளையில் பழனிக்கு வரும் அனைத்து பக்தர்களும் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


குறிப்பாக பக்தர்கள் அடிவார பகுதியில் இருந்தே கும்பாபிஷேகத்தை காணும் வகையில் 18 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக மலைக்கோவில், கிரிவீதிகள், பஸ்நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த திரைகள் அமைக்கப்பட இருக்கிறது.


மேலும் இதற்காக பிரத்யேகமாக 20 கேமராக்களை கொண்டு படம் பிடித்து ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.



Next Story