ஆழித்தேருக்கு வடம் கட்டும் பணி தீவிரம்


ஆழித்தேருக்கு வடம் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாளை தேரோட்டம் நடைபெற உள்ளதால் ஆழித்தேருக்கு வடம் கட்டும் பணி தீவிரமாக நடந்தது.

திருவாரூர்

நாளை தேரோட்டம் நடைபெற உள்ளதால் ஆழித்தேருக்கு வடம் கட்டும் பணி தீவிரமாக நடந்தது.

பங்குனி உத்திர பெருவிழா

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு 1 மாதமாக பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. ஆழித்தேரை அழகுபடுத்தும் பணிகள் முடிந்து தற்போது கண் கொள்ளாக்காட்சியாக தேர் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேரின் அருகே நின்று புகைப்படம் எடுத்தும், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

ஆழித்தேருக்கு வடம் கட்டும் பணி

இந்த நிலையில் ஆழித்தேருக்கான வடம் கட்டும் பணியில் இளைஞர்கள், கோவில் பணியாளர்கள் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். பக்தர்கள் கையில் இருந்து நழுவாத வகையிலும், பாதுகாப்பாக இழுக்கும் வகையிலும் வடத்தை தும்பு கயிறு மூலம் மூட்டினர். இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், தேருக்கு 6 வடங்கள் உள்ளன. அதில் 4 பொதுமக்களுக்கும், 2 பொக்லின் எந்திரங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.

தேரில் இருந்து சிறிது தூரத்திற்கு கம்பிகளான வடம் இருக்கும். அதனை அடுத்துதான் பெரிய வடத்தை இணைத்து மூட்டுகிறோம். கம்பியும், பெரிய வடமும் உராயும் போது வடம் பிரிந்து போக வாய்ப்பு இருக்கிறது. இதனால் கம்பியையும், பெரிய வடத்தையும் கயறு மூலம் பலமாக கட்டிவிடுகிறோம். தேரின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது என்றனர்.


Next Story