கருவாடு காயவைக்கும் பணிகள் மும்முரம்
சேதுபாவாசத்திரம் பகுதியில் மீன்பிடி தடைகாலத்துக்கு பிறகு கருவாடு காய வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
சேதுபாவாசத்திரம் பகுதியில் மீன்பிடி தடைகாலத்துக்கு பிறகு கருவாடு காய வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மீன்பிடி தொழில்
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் 4,500 நாட்டுப்படகுகள் மூலமாக மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 146 விசைப்படகுகள் மூலமாக மீன்பிடி தொழில் நடந்து வருகிறது.
கருவாடு விற்பனை
இந்த படகுகள் மூலமாக மீனவர்கள் அன்றாடம் பிடித்து வரப்படும் இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவை உடனடியாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்தது போக எஞ்சிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் காய வைத்து கருவாடு விற்பனை தொழிலும் நடந்து வருகிறது.
கோழி தீவனம்
உணவிற்கு பயன்படும் கருவாடுகளைவிட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறியவகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்புள்ளது. இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது. மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என அன்றாடம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்.
மீன்பிடி தடைக்காலம்
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன் இனப்பெருக்க காலம் எனக்கூறி மத்திய, மாநில அரசுகள் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க தடை விதித்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழிலுடன் கருவாடு உற்பத்தி தொழிலும் பாதிக்கப்படுகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு, 2 மாதங்கள் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி கருவாடு தொழிலும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வந்தனர்.
மீன்களை காய வைத்து...
இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதேநேரத்தில் கோடை காலத்தை போன்று வெயிலும் சுட்டெரித்து வருவதால் மீன்களை காய வைத்து கருவாடு உற்பத்தி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கான பணிகளில் மீனவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.