கோடை சீசனையொட்டி மலர் நாற்றுகள் நடவுவதற்காக 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் மண் நிரப்பும் பணி தீவிரம்
கோடை சீசனையொட்டி மலர் நாற்றுகள் நடவுவதற்காக 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் மண் நிரப்பும் பணி தீவிரம்
ஊட்டி
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடந்தது. இந்த மலர் கண்காட்சியை சுமார் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்தநிலையில், வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ள கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முராக நடந்து வருகின்றன. கடந்த மாதம் முதல் பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. நாற்றுகள் வளரும் காலத்தை பொருத்து நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.