யானைப்பாதையில் கருங்கற்கள் பதிக்கும் பணி
பழனி முருகன் கோவிலில் யானைப்பாதையில் கருங்கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
பழனி முருகன் கோவிலுக்கு, அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமானதாக உள்ளது. இநத் பாதைகள் வழயாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். படிப்பாதை, யானைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் பக்தர்கள் அமர்ந்து செல்ல இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மழைக்காலத்தில் யானைப்பாதை வழியாக செல்லும் போது அங்குள்ள சிமெண்டு தளம் பக்தர்களுக்கு வழுக்கும் வகையில் இருந்தது. இதனால் பக்தர்கள் நடந்து செல்லும் போது சிரமம் அடைந்து வந்தனர். எனவே யானைப்பாதையில் உள்ள சிமெண்டு தளத்தை அகற்றிவிட்டு கருங்கற்கள் பதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக யானைப்பாதையில் உள்ள சிமெண்டு தளத்தை பெயர்த்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, கோவில் யானைப்பாதையில் பக்தர்கள் சிரமமின்றி செல்லும் வகையில் சிமெண்டு தளத்தை அகற்றி கருங்கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக யானைப்பாதையில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் கருங்கற்கள், மணல், சிமெண்டு ஆகியவை வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் முடிவடையும் என்றனர்.