அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிய தேர் செய்யும் பணி
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிய தேர் செய்யும் பணி பூஜையுடன் தொடங்கியது.
மேல்மலையனூர்:
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் 7-ம் நாள் தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் புதியதாக தேர் செய்யப்படும். இந்த தேர் செய்வதற்கான பூஜை நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் அக்னி குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டது. பின்னர் கோவிலை வலம் வந்தவுடன் மேற்கு வாசலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து யாகம் நடைபெற்றவுடன் அந்த புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு தேர் சக்கரங்களுக்கும், தேர் பீடத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் சங்கீதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.