விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்


விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x

நெல்லையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

திருநெல்வேலி

நெல்லையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி, இந்து மகாசபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதேபோல் வீடுகளிலும் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி கடந்த மாதமே தொடங்கியது.

நெல்லை மாநகர பகுதிகளில் பாளையங்கோட்டை சமாதானபுரம் கிருபாநகர், மார்க்கெட் பகுதிகள், சீவலப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சிலை தயாரிப்பு பணிகள் இரவு- பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அந்த வகையில் ஒரு அடி முதல் 12 அடி உயரம் வரை பல்வேறு வண்ணங்களில் வித விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிலைகள் விற்பனை

இந்த சிலைகள் ரூ.150 முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த சிலைகளை பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் சிறிய அளவிலான சிலைகளை வீடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதேபோல் கைகளில் எடுத்து செல்லும் வகையிலான சிறிய சிலைகளும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

சிவன் பார்வதியுடன் கூடிய விநாயகர், லட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர், கிருஷ்ணர் ராதை, வெற்றி விநாயகர், எலி மற்றும் புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், சுயம்பு விநாயகர் என பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

ரசாயனம் கலக்காத...

உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் அம்பை, வள்ளியூர் உள்பட மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டு நீர் நிலைகளில் கரைத்த இடங்களில் இந்த ஆண்டும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் கலக்காத விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து கரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story