விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்


விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
x

கடலூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலூர்

கடலூர்,

கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் கடந்த 2020-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. மேலும் கடந்த ஆண்டு எளிய முறையில் கொண்டாடப்பட்டது. அதாவது சதுர்த்தி என்றாலே பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது தான் வழக்கம்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

31-ந் தேதி சதுர்த்தி விழா

தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் திருவிழாக்கள் மற்றும் வழிபாடுகள் வழக்கம்போல் நடந்து வருகின்றன. அந்தவகையில் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஆங்காங்கே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தயாரிக்கும் பணி

அதன்படி கடலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும். பின்னர் அந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சில்வர் பீச்சில் பாதுகாப்பாக கரைக்கப்படும். இதற்காக கடலூர் சாவடியில் 3 அடியில் இருந்து 10 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சாவடி பகுதியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தயாரிக்கப்படுவது சிறப்பம்சமாகும். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடந்ததால், இந்த ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அதிகளவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.

அனுமதி அளிக்க வேண்டும்

இதுகுறித்து கடலூர் கண்ணையாநகர் எஸ்.என்.சாவடியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்திக்காக பெரிய அளவிலான சிலைகள் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் 2 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எங்களுக்கு வேறு தொழில்கள் ஏதும் தெரியாததால், தொடர்ந்து விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறேன். நாங்கள் பேப்பர் மாவு மூலம் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். அதனால் இந்த ஆண்டாவது விநாயகர் சிலைகளை முன்கூட்டியே விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.


Next Story