மரங்கள் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக மரக்கன்றுகள் நடும் பணி


மரங்கள் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக மரக்கன்றுகள் நடும் பணி
x

தஞ்சை அருகே சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தொடங்கி வைத்தார்.

சாலை விரிவாக்க பணி

தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. அதன்படி ஒரு மரம் அகற்றப்பட்டதற்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

அதன்படி தஞ்சை- ஒரத்தநாடு சாலை, தஞ்சை- மன்னார்குடி சாலை, தஞ்சை புறவழிச்சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை- திருச்சி சாலையில் வல்லம் அருகே சாலை விரிவாக்கத்துக்காக இடையூறாக இருந்த புளிய மரங்கள் அகற்றப்பட்டன.

மரக்கன்றுகள் நடும் பணி

அந்த இடத்தில் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்கனவே உள்ள மரங்களுக்கு அருகேயும், மரம் வெட்டப்பட்ட இடத்தின் அருகேயும் என 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார்.பின்னர் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்களுக்கு லாரிகளில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினர். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை தஞ்சை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் மோகனா, நெடுஞ்சாலைத்துறை கட்டிட ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story