குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
குடியாத்தம்
குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
குடியாத்தம் நகரில் கடந்த புதன்கிழமை 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் குடியாத்தம்-காட்பாடி ரோடு, நான்குமுனை சந்திப்பு பகுதியில் இருந்து சேம்பள்ளி கூட்ரோடு வரை ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து மறுநாள் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதையடுத்து சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது, கடைகளில் முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி சாலையின் இருபுறமும் கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது.
இப்பணிகளை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.