42 கண்மாய்கள் ரூ.24.14 கோடியில் தூர்வாரும் பணி
மாவட்டத்தில் 42 கண்மாய்கள் ரூ.24.14 கோடியில் தூர்வாரும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்,
மாவட்டத்தில் 42 கண்மாய்கள் ரூ.24.14 கோடியில் தூர்வாரும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
கண்மாய் தூர்வாரும் பணி
காரைக்குடி அருகே வடகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கண்மாயை தூர்வாரும் பணி மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்தை மேம்படுத்தி, நிலத்தடி நீரை மேம்பட செய்யும் வகையில் குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல், வரத்து கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 226 முன்னாள் ஜமீன் கண்மாய்கள் உள்ளன. நீர்வளத்துறையின் கீழ் மொத்தம் 1,460 கண்மாய்கள் முறைகோட்டங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
42 கண்மாய்கள்
மாவட்டத்தில் 42 முன்னாள் ஜமீன் கண்மாய்களை தூர்வாரும் பணிகளுக்கு அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடியில் 6 கண்மாய்களும், தேவகோட்டையில் 8 கண்மாய்களும், காளையார்கோவிலில் 21 கண்மாய்களும், இளையான்குடியில் 6 கண்மாய்களும், சிவகங்கையில் 1 கண்மாய் என மொத்தம் ரூ.24.14 கோடியில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் 24 கண்மாய்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் நபார்டு வங்கி நிதியுதவின் கீழ் 16 சிறுபாசன கண்மாய்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட பாலாற்றின் குறுக்கே கோட்டையிறுப்பு, நாட்டார்மங்கலம் கண்மாய்கள் பயன்பெறும் வகையில் புதிய அணைக்கட்டு திட்டம் ரூ.7 கோடியிலும், சிங்கம்புணரி வட்டம் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ரூ.4 கோடியே 98 லட்சத்திலும் பணிகள் நடக்கிறது.
விரைவில் தொடங்கப்படும்
விரகனூர் மதகணையின் இடது, வலது பிரதான கால்வாய் புனரமைக்கும் பணி ரூ.28 கோடியே 80 லட்சத்திலும், சிவகங்கை, சிங்கம்புணரியில் உள்ள லெசிஸ் கால்வாய் மற்றும் கண்மாய்கள் புனரமைக்கும் பணி ரூ.4.45 கோடியிலும், திருப்பத்தூர் விருசுளியாற்றின் குறுக்கே கண்டவராயன்பட்டி அணைக்கட்டு, நெடுமரம் தடுப்பணை மற்றும் கண்மாய்கள் புனரமைக்கும் பணி ரூ.3.24 கோடியிலும் செயல்படுத்த அரசாணைகள் பெறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாங்குடி, எம்.எல்.ஏ, ஒன்றிய செயலாளர் ஆனந்தன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதாபாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.