ரூ.75 லட்சத்தில் உழவர் சந்தையை சீரமைக்கும் பணி மும்மரம்
திருவாரூரில் ரூ.75 லட்சத்தில் உழவர் சந்தையை சீரமைக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.
உழவர் சந்தை
காய்கறி பயிர் செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யாமல் நேரடியாக நுகர்வோரிடம் நல்ல லாபத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் உழவர் சந்தைகளை அமைத்தது. அதன் அடிப்படையில் கடந்த 1999-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு மன்னார்குடி, திருவாரூரில் உழவர் சந்தைகளை திறந்தது.
விவசாயிகள் காய்கறிகளை கட்டணம் இல்லாமல் அரசு பஸ்களில் எடுத்து வந்து விற்பனை செய்திடவும், இலவசமாக கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் எடை அளவினை சரியாக வழங்கிட தராசும் இலவசமாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே இணைப்பினை ஏற்படுத்தி, இருவரும் பயன் பெறும் நோக்கத்துடன் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.
தற்போது மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உழவர் சந்தைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பழைய பஸ் நிலையம் அருகில் கடைவீதியில் அமைந்து இருந்தும் உழவர் சந்தை பல்வேறு காரணங்களால் செயல்படாமல் உள்ளது.
ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு
கடந்த 2018-ம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக இந்த உழவர் சந்தையில் உள்ள கடைகளின் மேற்கூரை சேதமடைந்தது. தொடர்ந்து பல நாட்கள் உழவர் சந்தை பூட்டியே கிடந்ததால் நாள்தோறும் கிராமங்களில் இருந்து காய்கறி கொண்டு வரும் விவசாயிகள் விற்பனை செய்ய கடைகள் வசதியின்றி வியாபாரிகளிடம் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வரும் அவல நிலை இருந்து வந்தது.
தற்போது அரசு, விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், உழவர் சந்தையை சீரமைத்து தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து அரசு மூலம் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சீரமைப்பு பணிகள் மும்முரம்
இந்த உழவர் சந்தையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணியினை கடந்த மே மாதம் 19-ந் தேதி பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தற்போது கட்டிடத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் தரையில் இருந்து 2 அடி உயரத்தில் சுவர் கட்டப்பட்டுள்ளது. மேலும் சந்தையின் நுழைவு பகுதியில் அலுவலகம் போன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடந்த உழவர் சந்தை சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடப்பதால் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.