ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி
மயிலாடுதுறையில் ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது
கடந்த ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து புதிய மாவட்டத்திற்கான அண்ணா நூற்றாண்டு மாதிரி நூலம் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூ.6 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய நூலக கட்டிடம் கட்டுவதற்கு அரசு திட்டமிட்டு அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதனையொட்டி மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராஜகுமார் தலைமையில் மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நூலக கட்டிடம் அமைப்பதற்காக மயிலாடுதுறை நகரையொட்டி வள்ளாலகரம் ஊராட்சி கூட்டுறவுநகர் பகுதியில் உள்ள இடத்தினை நேற்று பார்வையிட்டனர். 15 ஆயிரம் சதுரடி அளவிற்கு ஒரே இடத்தில் இடமும், மக்கள் வந்து செல்வதற்கு எளிமையாக உள்ள இடமாக இந்த இடம் இருக்குமென்ற நோக்கத்தில் பார்வையிட்டு சென்றுள்ளனர். அப்போது ஊராட்சி தலைவர் ஜெயசுதா ராபர்ட், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகன், வடவீரபாண்டியன், கூட்டுறவுநகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் அருண்விஜய், செயலாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா மற்றும் பலர் இருந்தனர்.