திருவள்ளுவர் சிலையை சுற்றி சாரம் அமைக்கும் பணி தீவிரம்


திருவள்ளுவர் சிலையை சுற்றி சாரம் அமைக்கும் பணி தீவிரம்
x

கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருவள்ளுவர் சிலை

பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள ஒரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவலால் அந்த பணி நடைபெறவில்லை.

சாரம் அமைக்கும் பணி

இந்தநிலையில் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் திருவள்ளுவர் சிலை பகுதியில் ஆய்வு செய்தனர். அதன் பிறகு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ரூ.1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணிக்காக டெண்டர் விடப்பட்டது.

தொடர்ந்து இதற்கான பணியை தொடங்குவதற்காக கடந்த 6-ந் தேதி திருவள்ளுவர் சிலையை சுற்றி சாரம் அமைக்கப்பட்டது. இந்த பணி முழுவீச்சில் நடந்து வந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் சாரம் அமைக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாரம் முழுமையாக அமைக்கப்பட்டதும் ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story