விவசாயிகளின் நிலபதிவேடுகளை மென்பொருளில் பதிவேற்றும் பணி
அரசு திட்டங்கள் பெற விவசாயிகளின் நிலபதிவேடுகளை மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார்.
பதிவேற்றம்
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்காமல் போவதால் உண்மைத் தன்மை அறிய ஒவ்வொரு விவசாயிகளின் நிலபதிவேடுகளின் விபரங்களை அறிந்து கொள்ள வருவாய்த் துறை மூலம் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டது அதில் விவசாயிகளின் பதிவேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகொண்டாவில் நடந்த இந்த பணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
காலையில் ஊசூர் பிர்காவில் ஆன்லைன் விண்ணப்பங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்படுகிறதா எனவும், இதனையடுத்து பள்ளிகொண்டா பிர்காவில் இது வரை நலத் திட்டங்கள் பெற எவ்வளவு பேர் விண்ணப்பங்கள் பதிவு செய்து உள்ளார்கள் எனவும் ஆய்வு செய்தார். தொடர்ந்து நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் உடனடியாக தாசில்தாருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தெள்ளூர்
அதேபோன்று தெள்ளூர் கிராம நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்ட அவர், ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அங்கு புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, மருந்து வழங்கும் இடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது அணைக்கட்டு மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி, ஊசூர் வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கர்தயாளன், அசோக், தமிழரசன், அரவிந்த், கவுசல்யா, வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில் 25 சென்டுக்கு மேல் உள்ள விவசாயிகளின் நிலப்பதிவேடுகள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த திட்டத்தில் சேருவதற்கு தகுதியானவர்கள் என்ற புள்ளி விவரங்களை அவர்கள் ஆதார் அட்டையை வைத்துக் கொண்டே இங்கு தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒரு விவசாயி ஒரு ஏக்கருக்கு உண்டான உறம் மட்டுமே வாங்க முடியும் கூடுதலாக உரம் கேட்டால் உரத்திற்கான மானியம் வழங்க இயலாது எனவும் கூறினார்.