நகை செய்ய கொடுத்த2 கிலோ தங்க கட்டிகளுடன் தொழிலாளி தலைமறைவுவிழுப்புரத்தில் பரபரப்பு


நகை செய்ய கொடுத்த2 கிலோ தங்க கட்டிகளுடன் தொழிலாளி தலைமறைவுவிழுப்புரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நகை செய்ய கொடுத்த 2 கிலோ தங்க கட்டிகளுடன் தொழிலாளி தலைமறைவானாா்.

விழுப்புரம்


விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் குமரன், சண்முகம், குபேரத்தெருவை சேர்ந்தவர் தீபக். இவர்கள் 3 பேரும் நகை தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் விழுப்புரம் நாப்பாளைய தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல் (வயது 39) என்பவரிடம் அவ்வப்போது தங்க கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட பொருட்களை செய்வதற்காக தங்கக்கட்டிகளை கொடுத்து நகைகளை செய்து பெற்று வந்தனர். சக்திவேலுவும், அவர்கள் 3 பேரும் கூறியபடி உரிய நேரத்தில் நகைகளை செய்து கொடுத்து வந்துள்ளார்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த மாதம் 19-ந்தேதியன்று தீபக், மேற்கண்ட நகை உருப்படிகளை செய்வதற்காக சக்திவேலிடம் 450 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டியை கொடுத்துள்ளார். அதேபோல் குமரன், 200 கிராம் எடையுள்ள தங்கமும், ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணமும், சண்முகம் 1,600 கிராம் எடையுள்ள தங்கக்கட்டியையும் கொடுத்துள்ளனர். அதனைப்பெற்ற சக்திவேல், ஓரிரு மாதங்களில், நீங்கள் கேட்ட நகை உருப்படிகளை செய்து தருவதாக கூறியுள்ளார். ஆனால், சக்திவேல் நகைகள் செய்து தராமல், வாங்கிய தங்கக்கட்டிகளையும் திருப்பித்தராமல் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சக்திவேல் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story