கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொன்ற தொழிலாளி
வேலூரில் கள்ளக்காதலியை தீ வைத்து எரித்து கொலை செய்த கூலித்தொழிலாளி, தன் மீதும் தீக்காயம் ஏற்பட்டதால் கோட்டை அகழியில் குதித்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் கள்ளக்காதலியை தீ வைத்து எரித்து கொலை செய்த கூலித்தொழிலாளி, தன் மீதும் தீக்காயம் ஏற்பட்டதால் கோட்டை அகழியில் குதித்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் இருந்து புகை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் முள்ளிப்பாளையம் ராமமூர்த்தி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.
நேற்று காலை 9.30 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. வீட்டில் ஏற்பட்ட தீயினால் ஜன்னல் கண்ணாடி பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதை பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் உடனடியாக வேலூர் வடக்கு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த நேரத்தில் ரமேஷ் தீயில் எரிந்தபடி வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து மெயின் ரோட்டினை நோக்கி ஓடினார்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து முன்எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தீக்காயங்களுடன் ஓடிவந்த ரமேஷ் வேலூர் கோட்டை அகழியில் குதித்துள்ளார். அவரை பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்த போலீசார் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலி சாவு
இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் ரமேசின் வீட்டில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த திலகவதி (வயது 38) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
குடியாத்தத்தை சேர்ந்த ரமேஷ் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேலூர் முள்ளிப்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.
அவருக்கும் அதேபகுதியை சேர்ந்த கோபி என்பவரது மனைவி திலகவதிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
திலகவதி அடிக்கடி ரமேஷ் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை திலகவதி, ரமேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அப்போது அங்கு பெட்ரோல் கேனும் இருந்ததால் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. அதனால் ரமேஷ் மீதும் தீ பற்றிக்கொண்டது.
கோட்டை அகழியில் குதித்தார்
பயத்தில் அலறியடித்தபடி தீயில் எரிந்த நிலையில் ரமேஷ் தெருவில் ஓடினார். மெயின் ரோட்டுக்கு சென்ற அவர் அந்தவழியாக சென்ற ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு செல்ல முயற்சி செய்தார்.
ஆனால் அவருக்கு தீக்காயம் அதிகமாக இருந்ததால் வலியால் துடித்துள்ளார். அப்போது வேலூர் கோட்டை அகழியை கண்ட அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி அகழியில் குதித்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ரமேசுக்கு 50 சதவீத தீக்காயம் உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும் அவரால் பேச முடியாத நிலை உள்ளது. எதற்காக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது என்பது குறித்து மேல்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.