பெரியகுளத்தில் சாலையில் கிடந்த 10 பவுன் சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி
பெரியகுளத்தில் சாலையில் கிடந்த 10 பவுன் சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தொழிலாளியை பொதுமக்கள் பாராட்டினர்.
பெரியகுளம் வடகரை, சுப்பிரமணிய சாவடி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு வடகரை தேரடி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் பர்ஸ் ஒன்று தட்டுப்பட்டது. இதையடுத்து முத்துப்பாண்டி அந்த பர்சை எடுத்து பார்த்தார். அதனுள் தங்க சங்கிலி இருந்தது.
உடனே அவர் அந்த பர்ஸ் மற்றும் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு பெரியகுளம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சியிடம் நடந்த விவரத்தை கூறி, பர்ஸ் மற்றும் தங்க சங்கிலியை ஒப்படைத்தார். போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அந்த தங்க சங்கிலி 10 பவுன் எடை கொண்டதாக இருந்தது. இதையடுத்து முத்துப்பாண்டி அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே இன்று காலை பெரியகுளம் போலீஸ் நிலையத்திற்கு வாகன மண்டப சந்தை சேர்ந்த பாண்டிச்செல்வி (39) என்பவர் வந்தார். அவர் தனது தங்க சங்கிலி மாயமாகிவிட்டதாகவும், அதுதொடர்பாக புகார் கொடுக்க வந்ததாக தெரிவித்தார். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், முத்துப்பாண்டி ஒப்படைத்த தங்க தங்கிலி, பாண்டிச்செல்விக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா முன்னிலையில், பாண்டிச்செல்வியிடம் 10 பவுன் தங்க சங்கிலியை முத்துப்பாண்டி ஒப்படைத்தார். அப்போது வறுமை சூழலிலும் சாலையில் கண்டெடுத்த தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த முத்துப்பாண்டியை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.