தொழிலாளி விறகுகட்டையால் அடித்துக் கொலை


தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் தொழிலாளியை விறகுகட்டையால் அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை விறகு கட்டையால் அடித்துக்கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் தகராறு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை- சங்கரன்கோவில் மெயின் ரோடு குட்டிபேட்டை எட்டுவீட்டு லைன் பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேசுவரன் (வயது 46). கழுகுமலை தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கனகராஜ் (38).

கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் மது குடித்து விட்டு, கழுகுமலை குட்டிபேட்டை டாஸ்மாக் பார் அருகில் போதையில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

விறகு கட்டையால் அடித்துக்கொலை

அப்போது கனகராஜின் கழுத்தில் உமாமகேசுவரன் கடித்ததாக தெரிகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். எனினும் அங்கிருந்து செல்லாத உமாமகேசுவரன் குட்டிபேட்டை டாஸ்மாக் பார் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மீண்டும் வந்த கனகராஜ் திடீரென்று விறகு கட்டையால் உமாமகேசுவரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த உமாமகேசுவரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். கழுகுமலையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விறகு கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

----


Next Story