உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை


உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை
x

செந்துறை அருகே உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். சொத்து, கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டிய அக்காள்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

காதல் திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு வெள்ளையம்மாள், அடைக்கம்மாள் என்ற 2 மனைவிகள். முதல் மனைவி வெள்ளையம்மாளுக்கு சின்னக்கரந்தி (வயது 28), முத்தம்மாள் ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

2-வது மனைவி அடைக்கம்மாளுக்கு அம்மணி என்ற தங்கமணி (26) மகளும், ராமன் (25) என்ற மகனும் இருந்தனர். பழனி மற்றும் அவரது 2 மனைவிகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.

திருமணம் முடிந்து, நத்தம் ஆவிச்சிப்பட்டியில் தனது கணவர் குணசேகரன் (27) என்பவருடன் சின்னக்கரந்தி வசித்து வருகிறார். இவர் குணசேகரனை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். குணசேகரன் சென்ட்ரிங் மற்றும் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார்.

தம்பியின் நண்பருடன் கள்ளக்காதல்

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்த ஒருவருடன், அம்மணி என்ற தங்கமணிக்கு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து விட்டார்.

தனது தம்பி ராமனுடன் மொட்டமலைபட்டியில் வசித்து வருகிறார். பிளஸ்-2 வரை படித்துள்ள ராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மைக்செட் மற்றும் டெக்கரேஷன் போடும் தொழிலாளியாக ராமன் வேலை செய்தார்.

ராமனுடன் சேர்ந்து, எர்ரம்பட்டியை சேர்ந்த அவருடைய நண்பர் கார்த்திக் (23) என்பவரும் வேலை செய்தார். இதனால் அவர் அடிக்கடி ராமன் வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது கார்த்திக்குக்கும், ராமனின் அக்காள் அம்மணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

சொத்து பிரிப்பதில் தகராறு

கடந்த சில மாதங்களாக இவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ராமனுக்கு தெரியவரவே, 2 பேரையும் கண்டித்தார்.

மேலும் அம்மணியின் செல்போனை பிடுங்கினார். இதனால் அம்மணி, கார்த்திக் சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ராமன் மீது கார்த்திக் ஆத்திரத்தில் இருந்தார். இதற்கிடையே சின்னகரந்தியின் கணவர் குணசேகரன், அம்மணியை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராமனுக்கும், குணசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி பூர்வீக சொத்துகளை பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கள்ளக்காதலை கண்டித்ததால் கார்த்திக்கும், சொத்து தகராறால் குணசேகரனும் ராமன் மீது கோபத்தில் இருந்தனர்.

கிணற்றுக்குள் பிணம்

இந்த சூழ்நிலையில் கடந்த 8-ந்தேதி ராமன் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே தனது வீட்டருகே உள்ள தோட்டத்து கிணற்றில் நேற்று முன்தினம் ராமன் பிணமாக மிதந்தார்.

அவரது உடலை நத்தம் தீயணைப்பு படையினர் மீட்டனர். அவரது உடலில் பாறாங்கல் கட்டப்பட்டிருந்தது. இதனால் அவரை கொலை செய்து மர்ம நபர்கள் கிணற்றுக்குள் வீசி இருக்கலாம் என்று நத்தம் போலீசார் கருதினர்.

செல்போனில் பேச்சு

இதுதொடர்பாக திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா ஆகியோர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கணேஷ், விஜய பாண்டியன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். குறிப்பாக ராமனின் செல்போனுக்கு கடைசியாக பேசிய நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ராமனின் செல்போனுக்கு கார்த்திக் பலமுறை தொடர்பு கொண்டது தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், குணசேகரன், சின்னகரந்தி, அம்மணி ஆகியோருடன் சேர்ந்து ராமனை கொலை செய்து, கல்லைக்கட்டி கிணற்றுக்குள் உடலை வீசியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து கார்த்திக், குணசேகரன், சின்னக்கரந்தி, அம்மணி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான குணசேகரன், கார்த்திக் ஆகியோர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சொத்து, கள்ளக்காதல் விவகாரத்தில் எங்கள் 2 பேருக்கும் ராமன் பகையாளி ஆனார். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம். இதற்கு சின்னக்கரந்தி, அம்மணி ஆகியோரும் சம்மதம் தெரிவித்தனர்.

தலையில் அடித்து கொன்றோம்

அதன்படி கடந்த 8-ந்தேதி நள்ளிரவு ராமன் தங்கியிருந்த வீட்டுக்கு 4 பேரும் சென்றோம். அங்கு தென்னை ஓலையால் ஆன தட்டியில் ராமன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

மண்வெட்டி கைப்பிடியால் (உருட்டுக்கட்டை) தலையில் அடித்தோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார். பின்னர் நாங்கள் 4 பேரும் சேர்ந்து உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகே உள்ள கிணற்றுக்கு கொண்டு சென்றோம்.

அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ராமனின் உடலில் துண்டு மற்றும் வேட்டியால் பாறாங்கல்லை கட்டி கிணற்றுக்குள் தூக்கி வீசினோம். நாங்கள் அணிந்திருந்த ஆடைகளில், ரத்தக்கறை படிந்திருந்தது. அதனை கழற்றி தீ வைத்து எரித்து விட்டோம்.

மாட்டுச்சாணத்தால் மெழுகிய சகோதரிகள்

அடுத்த நாள் அதிகாலையில் சின்னகரந்தி, அம்மணி ஆகியோர் ராமனின் வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்குள் படிந்திருந்த ரத்தக்றையை மறைக்கும் வகையில் மாட்டுச்சாணத்தால் மெழுகினர். அதன்பிறகு எதுவும் தெரியாததை போல நாங்கள் இருந்து விட்டோம். ராமனை காணவில்லை என்று கூறி தேடுவதை போல நடித்ேதாம்.

ராமனின் உடல் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக கல்லை கட்டி வீசினோம். இருப்பினும் உடல் தண்ணீரில் மிதந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சொத்து, கள்ளக்காதல் தகராறில் வாலிபரை தீர்த்துக்கட்டிய சம்பவத்தில் அக்காள்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story