தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை


தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 8 Jun 2023 7:15 PM (Updated: 8 Jun 2023 7:15 PM)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வாலிபருடன் தகராறு

திண்டுக்கல்லில், பழனி சாலையில் முருகபவனத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நேற்று மதியம் 3.15 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் வாக்குவாதம் செய்தபடியே வந்து கொண்டிருந்தனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வாலிபரை வெட்ட முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் மற்ற 2 பேரும் அவரை தடுத்தனர்.

வெட்டிக்கொலை

இதனால் பதற்றமடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குள் செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் அவரை விரட்டி வந்த 2 பேரும் அரிவாளால் தோள்பட்டையில் வெட்டினர். இதனால் நிலைகுலைந்து போன அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே சரிந்து விழுந்தார். அப்போது வாலிபரின் கழுத்து, முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதற்கிடையே கொலை சம்பவம் குறித்த தகவல் காட்டுத்தீ போல் அப்பகுதியில் பரவியது. இதையடுத்து பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு பொதுமக்கள் திரண்டனர்.

பட்டப்பகலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்களது செல்போன்களில் வாலிபரின் உடலை புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட தொடங்கினர்.

பட்டறை தொழிலாளி

இந்தநிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு திரண்டு நின்று கொண்டிருந்த பொதுமக்களை கலைந்து போக செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடித்து விசாரணை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதையடுத்து மேற்கு போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தையகவுண்டன்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி (வயது 25) என்பதும், திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

முன்விரோதம் காரணமா?

மேலும் அழகுபாண்டி, கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதவிர நேற்று முன்தினம் அழகுபாண்டி வேலை பார்க்கும் இடத்தில் சிலர் அவருடன் தகராறில் ஈடுபட்டனர் என்பதும் தெரியவந்தது.

இதனால் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story