தொழிலாளியை வெட்டி கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது


தொழிலாளியை வெட்டி கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2023 12:45 AM IST (Updated: 10 Jun 2023 7:53 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தொழிலாளியை வெட்டி கொன்ற வழக்கில் அவருடைய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

தொழிலாளி வெட்டி கொலை

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த பெத்தையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 25). செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகபவனத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய வளாகத்துக்குள் மோட்டார் சைக்கிளுடன் சென்ற அழகுபாண்டியை, பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நண்பர்கள் 2 பேர் கைது

விசாரணையில் அழகுபாண்டியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை வெட்டி சாய்த்தது கே.குரும்பப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (24), மகேந்திரன் (26) என்பதும், திண்டுக்கல் பகுதியில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தனர்.

அதில், அழகுபாண்டியும், நாங்களும் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள வெல்டிங் பட்டறையில் ஒன்றாக வேலை பார்த்தோம். 3 பேரும் நண்பர்கள் ஆவோம். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெல்டிங் பட்டறை உரிமையாளரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. அதில் நாங்கள் 3 பேரும் கலந்துகொண்டோம். அப்போது பிறந்தநாள் பரிசு கொடுப்பது தொடர்பாக எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது.

வெட்டி சாய்த்தோம்

அந்த நேரத்தில் அழகுபாண்டி எங்களை அவதூறாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். பின்னர் அடுத்த நாள் அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் அழகுபாண்டி தங்கியிருக்கும் அனுமந்தநகர் நோக்கி புறப்பட்டோம். பழனி சாலையில் சென்று கொண்டிருந்த போது, எங்களுக்கு முன்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அழகுபாண்டி சென்று கொண்டிருப்பதை பார்த்தோம்.

உடனே அவரை பின்தொடர்ந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். பின்னர் முருகபவனத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய வளாகத்தில் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு நாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டோம் என கைதான இருவரும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.


Next Story