தெப்பம் கட்டுமான இறுதிகட்ட பணியில் தொழிலாளர்கள் தீவிரம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பம் கட்டுமான இறுதிகட்ட பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
கொரடாச்சேரி:
திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பம் கட்டுமான இறுதிகட்ட பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கமலாலய குளம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. தினமும் இரவு 8 மணிக்கு தொடங்கி 3 முறை விடிய விடிய குளத்தை தெப்பம் வலம் வரும். இந்த தெப்பத்தின் நீள, அகலம் 50 அடியும், உயரம் சுமார் 18 அடியும் உடையதாக அமைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 800 பேர் அமரும் வகையில் இத்தெப்பம் வடிவமைக்கப்படுகிறது. இந்த தெப்பத்தின் இறுதிகட்ட கட்டுமான பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தெப்பத்தில் பொதுமக்கள் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் வலுவான தரைத்தளம் அமைக்கப்படுகிறது.
தெப்ப ஓட்டம்
மேலும் இந்த தெப்பத்தினை அழகு படுத்துவதில் கோபுரங்களும் சாமி சிலைகளும் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணிகள் 2 நாட்களில் முடிவடையும். அதன் பின்னர் தெப்பத்திற்கு சாமி கொண்டுவரப்பட்டு தெப்ப ஓட்டம் நடைபெறும்.
தெப்ப திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தீயணைப்புத்துறை, மின்சார துறை, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.