ஷூ தொழிற்சாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்
ஆம்பூர் அருகே ஷூ தொழிற்சாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சோலூர் பகுதியில் தனியார் ஷூ தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த தோல் தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மூடப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதி அடைந்தனர்.
மேலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.