அரசு பஸ்சுக்கு கிடாய் பலியிட்ட தொழிலாளர்கள்
பண்ணாரியில் அரசு பஸ்சுக்கு தொழிலாளர்கள் கிடாய் வெட்டி பூஜை நடத்தினார்கள்.
சத்தியமங்கலம்
பண்ணாரியில் அரசு பஸ்சுக்கு தொழிலாளர்கள் கிடாய் வெட்டி பூஜை நடத்தினார்கள்.
தொழிலாளர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.40 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி, ராஜன் நகர், பசுவபாளையம், புஞ்சைபுளியம்பட்டி, திருப்பூர், திண்டுக்கல் வழியாக தேனிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பல ஆண்டுகளாக பண்ணாரி மற்றும் ராஜன்நகரை சேர்ந்த 36 தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் சவுகரியமாக இருந்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் அந்த பஸ்சுக்கு திருஷ்டி கழிக்க ஆண்டுதோறும் ஆடி மாதம் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.
கிடாய் பலியிட்டு பூஜை
இந்த நிலையில் கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக தொழிலாளர்கள் பஸ்சுக்கு பூஜை செய்யவில்லை. அதன்பிறகு 3 ஆண்டு்களுக்கு பிறகு இந்த ஆண்டு தொழிலாளர்கள் பூஜை நடத்த முடிவு செய்தார்கள். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் பண்ணாரி வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பஸ் ஏற வந்த தொழிலாளர்கள் அந்த பஸ்சை நிறுத்தி மாலை அணிவித்து சந்தனம், திருநீறு, குங்குமம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் கிடாய் பலியிட்டு பூஜை நடத்தினார்கள். இது அங்கு வந்த மற்ற பயணிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களும், அப்பகுதி தொழிலாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.