இலவங்காய் விளைச்சல் அமோகம்
பழனி பகுதியில் இலவங்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
பழனியை அடுத்த ஆயக்குடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இலவ மரங்கள் அதிகமாக உள்ளன. இங்கு மார்ச், ஏப்ரல் மாதத்தில் இலவங்காய் சீசன் தொடங்கும். அப்போது இலவங்காய்களை விவசாயிகள் பறித்து அவற்றை காய வைக்கின்றனர். பின்னர் காய்களில் இருந்து பஞ்சை பிரித்து விற்பனை செய்கின்றனர்.
தற்போது பழனி பகுதியில் இலவங்காய் சீசன் தொடங்கி உள்ளது. மரங்களில் காய்த்துள்ள காய்களை விவசாயிகள் பறித்து சாலையோர பகுதியில் காய வைத்துள்ளனர். இந்நிலையில் இலவம் பஞ்சுக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டு பெய்த மழையால் தற்போது காய்கள் அதிகமாக காய்த்துள்ளது. எனவே அவற்றை பறித்து காய வைத்து பஞ்சை பிரித்து வருகிறோம். ஆனால் பஞ்சுக்கு போதிய விலை இல்லை. அதாவது கடந்த ஆண்டில் ஒரு கிலோ இலவம் பஞ்சு ரூ.80 வரை விற்பனை ஆனது. தற்போது விலை குறைந்துள்ளதால் அவற்றை சாக்கில் கட்டி சேமித்து வருகிறோம் என்றனர்.