பச்சை பட்டாணி விளைச்சல் அமோகம்
கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில், பச்சை பட்டாணி அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயமே பிரதான தொழில் ஆகும். குறிப்பாக மேல்மலை கிராமங்களான பூம்பாறை, கவுஞ்சி, கிளாவரை, மன்னவனூர் உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு காலக்கட்டங்களுக்கு ஏற்ப பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக கடும் பனி நிலவியது. இதனால் பனிக்காலங்களில் மட்டுமே விளையும் உயர் ரக பச்சை பட்டாணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த பச்சை பட்டாணி விளைச்சலும், விலையும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்போடு விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்தனர்.
இந்தநிலையில் மேல்மலை கிராமங்களில் தற்போது பச்சை பட்டாணி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அவை செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட வெளியூர் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகள் நினைத்தப்படி விலை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பச்சை பட்டாணி விலை கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை இருந்தது. ஆனால் தற்போது அவற்றின் விலை வீழ்ச்சியடைந்தது. ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.30 முதல் ரூ.35 வரையே விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.