கூடலூர் பகுதியில் கம்பு பயிர் விளைச்சல் அமோகம்
கூடலூர் பகுதியில் கம்பு பயிர் அமோக விளைச்சல் கண்டுள்ளது.
கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பெருமாள் கோவில் புலம், சரித்திரவு, கல்லுடைச்சான்பாறை ஆகிய பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஒட்டு ரக கம்பு பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர். இந்த பயிர் கால்நடை, கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பால்மாடு வளர்ப்பவர்கள் கம்பு பயிர்களை அதிக அளவில் வாங்குகின்றனர். பின்னர் பயிரை வெயிலில் உலர வைத்து அதை மாவாக அரைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கம்பு பயன்பாடு அதிகமாகவே இருக்கும்.
கூடலூர் பகுதியில் கடந்த சில சில வாரங்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. இதன்காரணமாக கம்பு பயிர்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கம்பு பயிர் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இதன் விலை அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.