நெல்லை அருகே பயங்கரம்: இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை- வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது


நெல்லை அருகே பயங்கரம்:  இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை-  வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது
x

நெல்லை அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்

திருநெல்வேலி

பனவடலிசத்திரம்:

நெல்லை அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்

நெல்லை அருகே உள்ள தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வம் என்ற செல்வக்குமார் (வயது 35), டிரைவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகையாவின் மகள் சவுந்திரவள்ளி (30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான்.

செல்வத்திற்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் செல்வம் தனது மனைவி, மகனுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று மாலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் வீட்டில் இருந்த அரிவாளால் சவுந்திரவள்ளியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடனடியாக தேவர்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சவுந்திரவள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் ைகது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட செல்வத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை அருகே குடும்பத்தகராறில் இளம்பெண்ணை அவரது கணவரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story