பக்கத்து வீட்டில் நகை திருடிய இளம்பெண்
மாற்று சாவியை எடுத்து பக்கத்து வீட்டின் கதவை திறந்து நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் பூமாதேவி (வயது 46). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தமிழரசி. இவருடைய மருமகளான தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சுப்புலட்சுமி (28) மாமியாரை பார்ப்பதற்காக அடிக்கடி புதுவண்ணாரப்பேட்டை வந்து சென்றார்.
அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூமாதேவியுடன் சுப்புலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 20-ந் தேதி பூமாதேவி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை மட்டும் திருட்டு போய் இருப்பது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இளம்பெண் கைது
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர். அவர் பூமாதேவி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். ஏற்கனவே பூமாதேவி வீட்டுக்கு சென்ற சுப்புலட்சுமி, அவரது வீட்டின் ஒரு சாவியை திருடி வைத்துக்கொண்டார். பின்னர் சமயம் பார்த்து பூமாதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏற்கனவே திருடி வைத்து இருந்த மாற்று சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே சென்றதும், ஆனால் பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவியை தொலைத்து விட்டதாக பீரோவை பழுது பார்க்கும் நபரை அழைத்து வந்து பீரோவை திறந்து நகையை திருடியதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
சுப்புலட்சுமியிடம் இருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.